"நன்மக்கள் உள்ளமெலாம் நல்லொளியால் நிரம்பட்டும், நன்னெறிபால் எல்லோரும் ஒருங்கிணைந்து திரும்பட்டும்"

நுழைவாயில்

கதை
  நியாயங்கள்
  சூப்பர் ஹிட் வெள்ளி
  வாக்குமூலங்கள்
  சுண்ணாம்பு
  பூவும் வேரும்
கவிதை
  பாசக்கடல்
  விதி
  சுடர்க தமிழ்நெஞ்சம்
  மூன்றாம் காதல்
கட்டுரை
  பாபருக்கும், இராமருக்கும்...
 அனிச்ச மலர்
நேர்க்காணல்
  க்ருஷாங்கினி
நட்சத்திர ஆல்பம்
திரையோவியம்
காலண்டர் 2006
Difficulty reading Tamil Text?
எங்களுடன் தொடர்புகளுக்கு...
தமிழில் சுலபமாக எழுத! 
யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்ய
 

 

நியாயங்கள்


அமின்

"ஏய்..."

"...."

"ஏ, ஒன்னத்தாண்டிக் களுதை"

"கள்ளவூட்டய்யாவா கூப்புர்றது...? இந்தா வந்திட்டேன் சாமி"

"இதோபாரு... ஊருணியில் தண்ணி நொங்கும் நொறையுமா போவுதாம்.. உம் புருஷனை அழைச்சாந்து காட்டுக்குறிச்சிப் பக்கம் காவலுக்கு போவச் சொல்றதுதானே... உறும்ப காலத்திலே மேற்கே அடைச்சிட்டானுங்கன்னா இங்கனை பாச்சலுக்கு ஒரு சொட்டுத் தண்ணி வராதுடி புரியுதா?"

"இன்னிக்கு ஓரு பஞ்சாயமுங்கோ... அந்த ஆளு கூட்டத்துக்குப் போயிருக்கும்"

"ஆமாண்டி! அவனவன் தண்ணிக்கு ரெக்கையைக் கட்டிக்கிட்டு பறக்கறான். உம்புருஷனுக்கு இப்பத்தான் ஊரு பஞ்சாயமுன்னு வந்துச்சோ?"

"ராத்திரி ஒரு தவுசல் நடந்து போச்சிங்க... தவுசலைத் தீக்காத வரைக்கும் கரவம் கோயிலைவுட்டு நவரப்புடாதுன்னு நாட்டாமைக்காரங்க சொல்லிப்புட்டாங்க. ஊர் அல்லாமும் வேலை வெட்டிக்குப் போகாமே காளியம்மன் கோயில்லே கூட்டம் போட்டிருக்கு"

"நாட்டாமையை ஒதைக்க வேணும். அவனுக்கொன்னும் பிக்கல் பிடுங்கள் இல்லேன்னுதானே நெனச்ச நேரத்துக்குக் கூட்டம் போட்டுக்கிட்டு ஆளுகளை மடக்கறான். தண்ணியெல்லாத்தையும் காட்டுக்குறிச்சான் அடைச்சிகிட்டுப் பாச்சிக்கப் போறான். இங்கனை இந்த மொறைக்கும் தண்ணியில்லாமே வயலெல்லாம் வெடிப்போடிதான் கெடக்கப் போவுது. இந்த ஊரு பயலுகளும் இதை என்னான்னு பாக்கறதுக்குத் துப்பில்லாமே சீரழிஞ்சுப் போறானுக. எவனாச்சும் அடிச்சு புடிச்சுத் தண்ணி கொண்டாந்தா அணைதொறக்க வருவானுக"

அவள் எதிரே நிற்கும் பொன்னையா மன்றாயரிடம் பதில் சொல்லத் தெரியாமல் மெளனமாக நின்றாள். பரட்டைத் தலையும், கண்களில் பயமும், அழுக்கு உடையும் அவளைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது மன்றாயருக்கு. முகத்தைச் சுளித்துக் கொள்கிறார். காரியம் தலைக்கு மேலிருக்கிறதென்று நினைப்பு வருகிறது.

இங்கனை முட்டுக் கொடுத்தாப்போலே நின்னு ஆவப் போவதென்னாடி? போயி பஞ்சாயத்து நாட்டாமைக்கிட்டே சொல்லி கூட்டத்தைப் பெறவு வச்சிக்கலாமாம். இன்னிக்கு ஊருணியில் தண்ணி வந்திருக்காம். மேற்கே பத்து ஆளுகளை காவலுக்குப் போகச் சொன்னதா நாஞ் சொன்னேன்னு சொல்லுடி"

"சரிங்க கள்ளவூட்டய்யா’’ சொல்லிவிட்டுத் தலையைச் சொரிகிறாள். அவளுடைய பாவனைகள் அவருக்குப் புரிகிறது.

"எதுக்குடி நிக்கிறே?"

"கள்ளவூட்டய்யா கோவிச்சுக்கப்படாது. காலையிலேருந்து பல்லிலே பச்சத்தண்ணி படலே. மடியிலே துட்டிருந்தா கொடுங்க... அங்கனை வுள்ளக்கடையிலே டீ குடிச்சிட்டு போறேன்’’

"அதுக்கொன்னும் கொறைச்சலில்லே. வரும்புடியை என்னாடி புருஷனும் நீயுமா பண்றீங்க...?"

"ஏதாச்சும் நல்லநாளு பொல்லா நாளுன்னிருந்தா நாலு வூட்லே ரெண்டு சோறு கெடைக்கும். மத்த நாலெல்லாம் ஐயாவூட்டு கொல்லைப் பக்கமா குண்டு சட்டியை எடுத்துக்கிட்டு வந்தா ஆண்டச்சிக் கையாலே ரெண்டு கஞ்சி சோறாவது கிடைக்கும்"

"சரிதான்" என்று சொல்லி விட்டு மடியை அவிழ்த்துப் பர்ஸைத் துளாவி எடுத்துக் கொடுக்கிறார்.

"அப்போ நான் போவட்டுங்களா?"

"நின்னு என்னா வெட்டி முறிக்கப் போறே...? சுளுவாப்போயி ஆளுகளைத் தள்ளிவுடு..." என்று சொல்லிவிட்டு ஊருணியில் பல் குச்சை விட்டெறிகிறார். கால் நனைகிறார்போல ஓடிக் கொண்டிருக்கிற நீரில் வாயைக் கழுவிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். மெல்ல நடந்து ரோட்டுக்கு வருகிறார்.

கிழக்கே வயல்காடுகளை நோட்டமிட்டபோது  மன்றாயரின் கண்கள்  தாமாகக் கசிந்தன. வானத்தைப் பார்க்கிறார். இந்த யுகத்துக்கு மழை வருகிறாற்போல் இல்லாத தெளிவான நீல மேகத்தைக் கண்டு உள்ளம் சோர்ந்து போகிறது. மெல்ல முணு முணுக்கிறார். "இந்த வானம் என்னைக்கு உடைச்சிகிட்டு ஊத்தப் போவுதோ, வயக் காடல்லாம் தண்ணி ரொம்பப் போவுதோ?" ஒரு பிலாக்கணத்தோடு சாலையின் தூரத்தைப் பார்க்கிறார். சாலையின் இரு மருங்கிலும் புளிய மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்கின்றன. பூவும் காயுமாய் சிதறிப் போகின்றன. "ஒரு   மழைப்   பேஞ்சா   இவ் வருஷம் நல்லாக் காப்பிருக்கும்" என்று நினைத்துக் கொள்கிறார். நெட்டைக்கு நேராக சாம்பான் மனைவி சின்னத்தாயி ஒற்றையாய்ப் போவது சின்னதாய்த் தெரிகிறது. மெல்ல நடக்கிறார். திடுமென்று குடும்பப் பிரச்னைகள் வளையங்களாக அவரைக் கவ்வுகின்றன.

"ஊருணியில் தண்ணியில்லேன்னதும் வயல் வரப்புகள்ளே ஒரு காக்காக் குருவியைக் காணோம். ஆங்... வலங்கிமான் போற வண்டி வந்துடுச்சே... மணி ஒம்போதுக்கு மேலே ஆச்சு. இப்போ வூட்டுக்குப் போயி குளிச்சிட்டு கெளம்பினா பண்ணன்றை டவுனு வண்டிக்குப் போயிடலாம். புள்ளயைப் பாத்துட்டு கொஞ்சம் அரிசி கொடுத்துட்டு வந்தா தேவலை. பண்ணன்டரைக்குப் போனாத்தான் மறுவத் திரும்பி ராத்தி?? எட்டுக்கு வர முடியும்" வேகமாக நடக்கிறார். சாலையோர வயல்களிலெல்லாம் ஒரு சொட்டுத் தண்ணியில்லாமல் பயிர்கள் நாசமாய் போயிருக்கிறது. உள்ளம் வெந்து போகிறார்.

சத்திரத்து டீக்கடையில் வியாபாரமில்லாததால் கலையிழந்தாற் போலிருந்தது. மாரியம்மன் கோயில் கிணற்றடிப் பக்கம் குடைப்பிடித்தாற் போல் இருக்கிற வேப்ப மரத்து நிழலில் வட்டமாய் அமர்ந்து  வாலிபர்கள் நாலுச்சீட்டு விளையாடுவது தெரிகிறது. அதெல்லாம் அவருக்குப் பிடிக்காத மாதிரி சற்று வேகமாகவே நடந்து போகிறார்.

"வெட்டியா சீட்டு விளையாடற நேரத்திலே தலப்புக்குப் போயி தண்ணி என்னாச்சுன்னு பாத்தாலும் ஊர் செழிக்கும். இப்படி வெட்டியா சூதாடறதில் யாருக்கு லாபம்?’’ தானாக நினைத்துக் கொண்டு நடக்கிறார்.

 *   *   *

கருக்கல் நேரம்.

பொன்னைய்யா மன்றாயர் கனத்த முண்டாசாய்க் கட்டிக் கொண்டு கையில் பொ?ய தடிக்கம்பும், வாயில் சுருட்டுமாய் கழனிப்பக்கம் சென்றார்.

"நேற்று சின்னத்தாயிடம் சொன்ன மாதிரி அவள் ஆளுகளைத் தலைப்புக்கு போகச் சொல்லியிருப்பாளோ? நேத்து டவுனுக்குப் போனதால் தவுசல் தெரியலை. ஆள் போயிருந்தா சம்பாவட்டம் நெம்பியிருக்கும்..."

நேற்றைய முறையில் தண்ணீர் ஊர் வந்திர்க்கலாம் என்ற நப்பாசையில் அந்தக் குளிரும் அவருக்கு சூடாக இருப்பது போல் தோன்றியது.

"ஆளுகளைவிட்டு சம்பா வட்டம் கண்மாயை அடச்சிப் போட்டது நல்லதாகப் போய்விட்டது." என்ற நினைத்துக் கொண்டே அந்த ஐம்பத்தைந்து வயதிலும் விரசாக நடந்தார்.

கீழ்வானத்தில் இப்போதுதான் வெள்ளி முளைத்து விட்டிருந்தது. கழனியில் குண்டும் குழியுமாய்க் கிடந்த தண்ணீரிலிருந்து தவளைகள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. கடுமையான பனிவிழுந்து ஊதக் காத்து வீசிக் கொண்டிருந்தது.

மன்றாயர் மெல்லமாய்த் கனைத்துக் கொண்டு துப்பட்டியை இழுத்துப் போர்த்திக் கொண்டார். மெல்லக் கனைத்துக் கொண்டார். குட்டிக் கருவேல் மரங்கள் அவருக்கு மனிதர்கள் நிற்பது போல் தோன்றியது.

வரப்பில் எலியை விழுங்கிக் கொண்டு "யெங்யெங்கே" என்று கத்திக் கொண்டிருந்த சாரைப் பாம்பைத் தடிக்கம்பால் தட்டிவிட்டு எலியை பாம்பின் வாயிலிருந்து பிரித்தார். அடிபட்டதாலோ என்னவோ அந்தப் பாம்பு வரப்பிலேயே புரள ஆரம்பித்தது. அதை மேலும் நசுக்கி அதற்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்ப்பதற்காகத் தடிக்கம்பு முனையால் ஒரு முழ உயரத்திற்கு மெல்லத் தூக்கினார். வால் பக்கம் துள்ளியதைப் பார்த்ததும் கீழே போட்டு இன்னும் மூன்று தட்டு தட்டி அது செத்துப் போயிருக்கும் என்ற நம்பிக்கையில் கம்பின் முனையை வயிற்றுப் பக்கத்தில் கொடுத்து கழனியில் தள்ளினார்.

தோள் நைந்து அழுகிய கத்தரிக்காயைப் போல் அனாதையாய்க் கிடந்த எலியை "நீதானே பயிரை அழிக்கிறது... அழிக்கிறது.. அழிக்கிறது..." என்று போகப் போக ஒரு வலுக்கட்டாயமான ஆத்திரத்தை உண்டாக்கிக் கம்பின் முனையால் எலியின் தலையை நசுக்கி அப்புறம் அந்தப் பாம்புக்கு நேர்ந்த கதியையே  இதற்கும் உண்டாக்கினார்.

கீழ்வானம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிச்சம் காட்டியது. கழனியில் நீர் நொம்பியிருக்கும் என்று நினைத்துக் கொண்டு வேகமாக நடந்தார்.

பொறுக்கோடிப்போன வரப்பில் நடப்பதையும் பொருட்படுத்தாமல் சின்னச் சின்ன கழனிகளைத் தாண்டி, தலையில் இடிக்கிறாப் போல் நீட்டியிருந்த கருவேலங் குச்சிகளை ஒதுக்கிவிட்டு தன்னுடைய தலையில் அது இடிபடாது என்கிற நிலையில் மரத்தைத் தாண்டி அப்புறம் கழனிக்கும் போனார். அவர் வயல் வந்ததும் சனி மூலையில் நின்றபடியே, நீர் வரப்பை முட்டி விட்டதா என்று பார்த்தார். வயலில் நீர் இல்லாமல் சிதிலம் சிதிலமாக வெடித்துப் போயிருந்நது. ஒரு பதை பதைப்போடு வயலில் குதித்து பயிரை மிதித்து கொஞ்சம் தூரம் ஓடினார். கால்களில் பனியீரம் பட்டு சொத சொதப்பாயிருந்தது.

கண்மாயில் அவர் எப்படி அடைத்துப் போட்டிருந்தாரோ அப்படியேயிருந்தது. பள்ளத்தில் மட்டும் நீர் நிறைந்து தவளைகள் சிலுப்பிக் கொண்டிருந்தன.

பொன்னையா மன்றாயருக்கு வெட்டியானின் மேல் கோபம் கோபமாய் வந்தது. அவன் நேற்று தலப்புக்கு போகவில்லை என்று உறுதியாக நம்பினார். "என்னக் கொளுப்பிருந்தா அந்தப்பயல் காவ லுக்குப் போகாமலிருந்திருப்பான். காட்டுக்குறிச்சான் நல்லா எத்திப்புட்டு தண்ணிபாச்சிட்டான். இந்த முறையும் அம்போதானா...?" மன்றாயருக்குக் கோபம் தலைக்கேறியது. தான் என்னச் செய்கிறோம் என்ற நினைவேயில்லாமல் கண்மாயை வெறுமையாகப் பார்த்தார். சிறகில் அடிபட்ட பறவை போல் உள்ளம் படபடத்துக் கொண்டிருந்தது.

சட்டென்று ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல கனைத்தவராய் சுருட்டை பற்ற வைத்துக் கொண்டார் தடிக்கம்பை வரப்பில் ஒரு தாங்குதலுக்காக ஊன்றி மெல்ல வரப்பில் ஏறி யம்மாடி... என்று பெருமூச்சு விட்டு விட்டு மேற்கே நோட்டம் போட்டார்.

கொஞ்ச தூரத்தில் அருச்சின காணிப் பக்கம் அரிக்கேன்லாந்தர் எரிந்து கொண்டிருந்தது மங்கலாய்த் தெரிந்தது.

ஒருவேளை நமக்குத் தண்ணிவுடாமே ஐயர் வீட்டு ஆள் அடைச்சிப்புட்டானோ?’ என்று நினைத்துக் கொண்டு அருச்சினகாணிப் பக்கம் நடையைப் போட்டார். ஐயர் வீட்டு ஆள் அணை போடவில்லை என்று தெரிந்ததும் கோபம் அடங்கியது.

ஐயர் வீட்டு ஆள் ஒரு சக்கரம் போல் சுருட்டிக் கொண்டு குறட்டையடித்துக் கொண்டிருந்தான்.

"முத்தா... ஏய் முத்தா...’’

"... ... "

"ஒன்னத்தான்டாளே...முத்தா, ஏய்முத்தா..."

அரைத் தூக்கத்திலிருந்த அவன் காதில் மன்றாயா?ன் கத்தல் அவன் செவிப்பாறையைக் கிழித்து விடுவது போல் கேட்டது. ஏதோ ஒன்று தூக்கிவிட்டதைப் போல் உணர்ந்து ஒரு பதைப்போடு போர்வை போல் போர்த்தியிருந்த வேட்டியை இடையில் கட்டிக் கொண்டு வரப்பில் போட்டுப் படுத்திருந்த துண்டை உதறியபடி "... யாரு பெரியய்யாவா...?" என்று தூக்கக் கலக்கத்தோடேயே கேட்டான்.

"என்னடா காலைக் கெளப்பிக்கிட்டு வுசும்பல்லே போட்டுட்டே... தலைப்பிலேதண்ணி என்னாச்சுன்னு ஒரு   சேதியும்   தெரியக் காணோம்... நேத்து வெட்டிப் பயலை போகச் சொல்லி வெட்டிச்சிக்கிட்டே சொல்லிபுட்டு டவுனுக்கு போயிட்டேன். இங்கனை வந்து பாத்தா போட்ட அணை போட்டாப் போலேயிருக்கு..."

"ஆமாங்க பெரியய்யா... இந்த ஊருல கேக்கறதுக்கு மனுஷா இல்லாமத்தான் காட்டுக்குறிச்சான் மொற தவறி அடச்சி போட்டிருக்கான். ஒரு குளுவான் சருக்கைப் பக்கமா வந்து எட்டிப் பாக்கலே..."

"ஒருத்தரும் போவ வாண்டாண்டா... நானே போறேன். எனக்குத்தான் இந்தவூரு தவுசலுக்கெல்லாம் சீட்டு போட்டிருக்குதாங்காட்டியும்..."

ஒரு ஆத்திரத்தோடு போகிறார். சுருட்டுவாசனை பளிச் சென்று தாக்குகிறது. முத்தன் அவர் பின்னாலேயே போகலாமா? வேண்டாமா? என்று யோசித்துவிட்டு "அவரே போய் வரட்டும்" என்று சொல்லிக் கொண்டே மீண்டும் துண்டை விரித்து வேட்டியை துப்பட்டியாக்கிச் சுருட்டிக் கொள்கிறான்.

 *   *   *

காட்டுக்குறிச்சி வாய்க்கால் நீர் முழுவதையும் அணைபோட்டுக் கரம்பைப் பக்கம் தண்ணி விட்டு விட்டு கண்மாயைச் சுற்றி வேல் கம்பும் வெட்டருவாளுமாய் முப்பது ஆட்களுக்குமேல் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். பீடியை புகைத்துக் கொண்டும், காயாத கானகத்தில் ஈரடிபாடி அதை தனக்குத்தானே ரசித்துக் கொண்டும், அரைத்தூக்கம் போட்டுக் கொண்டு குதூகலித்துக் கொண்டிருந்த காட்டுக்குறிச்சி விவ சாயிகளைப் பார்த்ததும் பொன்னையா மன்றாயருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "என்ன துணிவிருந்தா மொறையில்லாதப்போ அணைப் போட்டிருப்பாங்க" என்று ஆத்திரத்தோடு கண்மாயில் இறங்கினார்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வெள்ளக்காடாய் நீர் தேங்கியிருந்தது. பயிர்கள் கொஞ்சிச் சாய்கின்றன.

கூட்டத்திலிருந்த ஒருவன் கத்துகிறான். “யார்ரா அவன் அவ்வளவு சுளுவா அணையிலே எறங்கறது... ஏலே யார்ரா அது?"

மன்றாயர் ஒரு வேகத்தோடு எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவராய் அணையைப் பிடுங்கி விட்டு விட்டு பலகையை வரப்பில் தூக்கி எறிகிறார்.

"ஏலே... அங்கே பாருடா எவனோ வந்து அணையை ஒடச்சிவுட்டுட்டான். எந்திரிங்கடா... எந்திரிங்கடா...."

எல்லோரும் வேல்கம்பும் அரிவாளுமாய் வேகமாய் கண்மாய் ஓரம் வருகிறார்கள்.

"நீ எந்த ஊருப்பயடா... என்னச்சுளுவா அடைச்சி வெச்சிருந்த அணையைத் தொறந்துவுடுவே...’’

ஒருவன் கண்மாயில் இறங்கி அவரை நெட்டித் தள்ளுகிறான். அவனை வலுக்கட்டாயமாகத் தாக்குகிறார் மன்றாயர். "என்னடாநாயம் பண்றீங்க. ஆத்திலே மொறவுட்டு மூனு நாளாயும் ஊருக்கு தண்ணி வரலேன்னா எங்கவூரு ஆளுக படையெடுத்து வந்து கேட்க மாட்டாங்கன்னுதானே இந்த மாதிரி அநியாயம் பண்றீங்க. ஒங்களுக்கு இப்போ எங்கேடா மொறையிருக்கு...? எங்க ஊரு மொறையிலே இப்படி அணையை அடச்சி போட்டதில்லாமே ஐயாவை கேக்கணுமா வேறே..."  கீழ்ப் பலகையையும் பிடுங்கி வரப்பில் போட்டுவிட்டு மேலே ஏறுமுன் அவர் மண்டையில் படீரென்று வெட்டருவாளால் தாக்குகிறான் ஒருவன்.

"ஙம்மாடி... ஏய்... அவ்வளவு தூரத்துக்கு மிஞ்சிப் போச்சா..."

"என்னடா நாயத்தைக் கண்டான் அவன். அடைச்சுப் போட்ட அணையை தொறந்தது இல்லாமே நாயம் வேறயா பேசணும். கொல்லுங்கடா அவனை’’ கூட்டத்திலிருந்த நாட்டாமைக்காரன் குரல் கொடுத்ததுதான் தாமதம், மன்றாயர் அந்தப் பாம்பை எப்படி அடித்தாரோ, அந்த எலித்தலையை எவ்வளவு வேகமாய் நசுக்கினாரோ அந்த அவஸ்தையை இவருக்குச் செய்து அந்தப் பிராணிகளை அவர் கழணியில் நெட்டித் தள்ளியதைப் போல் இவரையும் அடித்துப் போட்டு விட்டு ஊருணியில் தள்ளிவிட்டு நின்றனர்.

அந்த அரை உயிர் நிலையிலும் வரப்பின் மேல் ஆட்கள் ரீங்கரிப்பது மெல்லக் கேட்டது மன்றாயருக்கு.  "லேய்... நம்ப பொன்னையா மன்றாயர்டாலே... இருட்டிலே தெரியாமே அடிச்சு சாச்சுபுட்டோம்.  நல்ல நாளு பெரிய நாளுன்னு போனா அவரு பொண்டாட்டி அவுக வீட்டிலே என்ன உண்டானதோ  அதையெல்லாத்தையும் போடுமே..." என்ற அனுதாபத்தைக் கேட்கக்கூட திராணியில்லாமல் அவர் உயிர் பிரிகிறது. திறந்து விடப்பட்ட ஊருணியில் அவர் உடல் கோரைக் குற்றிலும் மருவிலுமாய் ஒதுங்கி ஒதுங்கி மெல்லமாய் கிழக்கே போகிறது.

 *   *   *

"ஆண்டச்சியே..."

"... ...’’

"ஓ, ஆண்டச்சியே...?"

"யாருடி அது. வெட்டிச்சியா...?"

"ஆமாங்க, ஐயா இருக்காவோளா...?"

"அவுக கருக்கல்லேயே எந்திரிச்சி கழணிக்கு போனவுகதான். இன்னும் வரக்காணோம். என்னாடி விஷயம்...?"

"ஐயா காட்டுக்குறிச்சிக்கு ஆளுகளைப் போகச் சொல்லி நேத்தைக்கு சொல்லிப்புட்டுப் போனாங்க. நேத்து ஊருக் கூட்டமுன்னு போக முடியல்லே. இதை ஐயா வந்தா சொல்லிப்புடுங்க"

"சரிடி...’’ என்று சொல்லிவிட்டு அந்த அம்மாள் எதையோ நினைத்துக் கொள்கிறாள். "ஏய் வெட்டிச்சி, ராத்திரி சுட்ட இட்டிலி இருக்கு வாங்கிட்டுப் போடி..."

"கொடுங்கோ வாங்கிட்டு போறேன்... என்னமோ... ஐயாவூடு நல்லா வெளங்கனும்."

"இதுக்கொன்னும் கொறைச்சலில்லே" என்று சொல்லிக் கொண்டே பிட்டும் பிடாமலுமாய் இருந்த இட்டிலித் துண்டுகளைப் போட்டுவிட்டு, அதன் மேலேயே சுண்டக் குழம்பையும் ஊற்றுகிறாள்.

"அப்போ வாறேன் ஆண்டச்சி..."

சின்னத்தாயி போகிற போது அவளைப் பார்க்கிறாள். அந்த அம்மாளுக்கே சொந்தமான பொட்டு நாலணா அளவுக்கு பளிச்சிட்டுக் கொண்டிருக்கிறது.

 *   *   *

சம்பாவட்டம் கண்மாயில் நீர்நிரம்பி பொன்னையா மன்றாயரின் ஒரு காணி நிலத்திலும் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.

ஊர் ஆட்கள் ஊருணியில் தண்ணீர் வரும் செய்தியை அறிந்து கொண்டு ஆளுக்கொரு மண்வெட்டியைச் சுமந்து கொண்டு கழனிப்பக்கம் வரத் தொடங்கினர்.

சம்பா வட்டத்திற்கும் கிழக்கே தண்ணீர் இல்லாததைக் கண்டதும் அணை மன்றாயரின் வயலுக்கு நேராய் கிடப்பதை அறிந்து கொண்டு வேகமாக அணையைத் திறக்க வருகின்றனர் ஊர் ஆட்கள்.

"பாத்தியாலே... அவன்தான் அடச்சிப் போட்டிருக்கான். ஊருணி தண்ணி அவனுக்குத்தான் சொந்தமோ? புடுங்கி விடுங்கடா அணையை..." என்று ஒரு வேகத்தோடு அணையைத் திறக்கின்றனர். கழனியில் பாய்ந்த தண்ணீர் முழுவதும் கண்மாயில் வெளியேறுவது கூடத் தெரியாமல் ஒரு அம்பக்கோடு பீடியை பற்ற வைத்துக் கொள்கின்றனர்.