|
சித்திரைத் திங்கள் வெயிலென - என்
சிந்தையை நோகச் செய்தவளே
நித்திரை உலகுக்கு அனுப்பாதே - என்
நிம்மதி கெடுத்து வாட்டாதே!
பத்தரை மாற்றுத்
தங்கமெனப் - பல
பண்புகள் கொண்டு ஒளிர்ந்தவளே!
இத்தரை மீது
நான்வாட - நீ
என்னை விட்டுச் ஏன்சென்றாய்?
உலவும் தென்றல் குளிரெனவே - என்
உள்ளச் சோலையில் பூத்தவளே!
இலவு காத்த கிளிபோலே
எனை
ஏங்க வைத்தே ஏன்சென்றாய்?
பிரிவாம்
என்ற புயல்வீசி - நற்
பாசச் சுடரை அனைத்தாயே!
சருகாய் என்றன் வாழ்வுதனைத் - தரையில்
சரியச் செய்தே ஏன்சென்றாய்?
இதயம் வாழும்;
இனியவளே - எனை
இணைத்து வாழ்ந்திட நினைத்தவளே!
உதய மலராய்ச்
சிரித்தவளே - என்
உயிரே! ஒளியே! ஏன்சென்றாய்?
சாதியின்
கொடுமை தாளாமல் - துயர்த்
தணலில் நெஞ்சம் கொதித்திடவே
பாதியில் பிரிந்து வாடுகிறேன் - இந்தப்
பாவிக்குப் புகலிடம் தாராயோ?

|